ஐந்து பெண்கள்
புத்தகம் ஒன்று - ஸ்பந்தனா
1
மலை உச்சியின் முகட்டில் காற்றில் அடித்து வரப்பட்ட மேகங்கள் கவிழ்ந்து கிடந்தன. பார்வைக்கு புலப்படாமல் எங்கேயோ பெய்த மழையில் இருந்து மண்வாசம் கிளம்பி நாசியை அடைத்தது. கவனமாக ஒவ்வொரு அடியையும் வைத்து யார் பார்வையிலும் படாமல் நிதானமாக நடந்தேன். மண்பாதையில் இறங்கும் முன் இருபுறமும் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை என்பதை உறுதி செய்த பின், விருட்டென ஓடி சென்று குடிலுக்கு பின்வாசலின் அருகில் இருந்த விளாமரத்தின் பின் ஒளிந்து பின் வாசலையே வெறித்தேன். நடந்து வந்த அலுப்பில் கொஞ்ச நேரம் கண்களை மூடி மனதைத் திறந்து காத்திருந்தேன்.
கல்லூரி வளாகத்தில் மர நிழலில் அமர்ந்து மவுத் ஆர்கன் வாசித்தபடி மஜுந்தார் ஒரு நொடி வந்து மறைந்தான். வழிந்த கண்ணீரை துடைத்தபடி கண்களை திறந்தேன். வானெங்கும் கருமேகங்கள் திரண்டு இருந்தன. கதவு திறக்கும் சத்தம் கேட்டு பார்வையை திருப்பினேன். செங்கண். சுற்றிலும் பார்வையால் துழவியவன் கண்களில் ஏக்கமும் ஏமாற்றமும் இருந்தது. என் கண்களில் புரையோடும் கண்ணீரால் அவன் உருவம் தெளிவில்லாமல் கரும்பு பூவை போல் தெரிந்தான். ஓடிச் சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட எத்தனித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன்.
காட்டை உலுக்கியது போல் திடீர் மழை ஜோராகப் பெய்ய ஆரம்பிக்க, செங்கண் அவசரமாய் கதவை சாத்தி வீட்டினுள் சென்று விட்டான். நடந்து சென்று குடிலின் பக்கவாட்டில் இருந்த அடுக்களையின் ஜன்னலில் பார்வையை வீசினேன். மூப்பன் எதையோ சமைத்துக் கொண்டிருந்தான். பாலித்தீன் கவரில் சுருட்டி கொண்டு வந்த பணத்தை சத்தம் இல்லாமல் ஜன்னலில் உட்புறம் வைத்து அந்த இடத்தை விட்டு அகன்றேன். வழிநெடுகிலும் அழுதபடி நடந்து வந்த என் கண்ணீரை மழை துடைத்தபடி கூடயே வந்தது. செங்கனை மூப்பன் பார்த்துக் கொள்வான்.
நீண்ட தூரம் நடந்ததில் கால்கள் சோர்ந்து ஒரு மரத்தின் கீழே அமர்ந்தேன். காட்டை விட்டு வேகமாய் கடந்து போய்விட வேண்டும்.
ஒரு ஜீப் வரும் சப்தம் கேட்டு மரத்தின் பின்னே பதுங்கினேன். அது மிக அருகில் வந்து நின்றது. ஜீப்போட்டி வந்தவன் இறங்கினான். அவன் கண்ணில் படாமல் ஒளிந்தேன். என் முதுகின் மேல் ஒரு ஆண் கரம் பட அதிர்ந்து திரும்பினேன் . காக்கி உடையில் அவன். அவன் கண்கள் சிவந்து முழு போதையில் இருந்தான்.
" யாருடி நீ, இங்க என்ன பண்ற?"
" ஐயா டவுனுக்கு போவணும். மழைக்கு ஒதுங்கி இருக்கேன்"
" நீ எந்த ஊரு?"
" இங்கதான் பக்கத்துல"
" பக்கத்துலன்னா, ஊர் பேர சொல்லுடி?"
அமைதியாய் நின்றேன்.
" எதுக்கு ஜீப்பை பார்த்து ஒளிஞ்ச? உன் பையில என்ன வச்சிருக்க?"
" ஒன்னும் இல்லீங்கய்யா"
அவன் பையை என்னிடம் இருந்து பிடுங்கினான். அதே நேரம் இன்னொரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது. ஜீப்போட்டி அந்த வண்டியை கிளம்பச் சொன்னான்.
"என்னடி இது?" பையில் இருந்து ஒரு நீண்ட கத்தியை எடுத்து என்னிடம் காண்பித்தான்.
" சுள்ளி வெட்ட ஐயா"
"ஏய் கிளம்பும்மா" காரில் இருந்து இறங்கிய பெண்ணை ஜீப்போட்டி விரட்டினான். இவன் என் மார் மீது கை வைத்து அங்கியை கிழித்தான்.
" ஐயா என்ன விட்டுடுங்க"
" இங்க என்ன நடக்குது?" அவள் கத்தினாள்.
" நீ கிளம்புடி"
ஜீப்போட்டி அவளை தடுத்தான்.
அவன் என் முலையில் வாய் வைக்க, அவனைத் தள்ளி என் பின் முதுகில் செருகி இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தை அறுத்தேன். அவன் அலறி விழ, "அடியே தேவுடியா சிறுக்கி" ஜீப்போட்டி ஜிப்பினுள் இருந்த கை துப்பாக்கி எடுத்து என்னை நோக்கி சுட எத்தனித்தான். அதே நேரம் அவள் அவனை எட்டி உதைத்து என்னை நோக்கி கத்தி எறிய சைகை செய்தாள். அடுத்த சில வினாடிகளில் அவனும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து போனான்.
அவள் என்னை நோக்கி வந்தாள். "பயப்படாதே இங்க யாரும் வர மாட்டாங்க" என்றபடி கத்தியை நன்றாக கழுவி பின் என்னிடம் நீட்டினாள். நான் மரத்தின் கீழ் அமர்ந்தேன். சற்று நேரம் அமைதியாக காத்திருந்தாள். "நீ எங்க போகணும்".
" சென்னை"
"சென்னை?" அவள் தொனியில் ஆச்சரியம்.
"சரி வா நான் அங்க தான் போறேன்" . என்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவள் காரில் ஏறினேன். என்னை உடைமாற்றச்சொன்னாள்.
காரை எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக ஓட்டிக்கொண்டு சென்றாள். மழை முற்றிலுமாக ஓய்ந்த பொழுது நிலவு அடர்ந்த மரங்களின் மேலே ஒளிர்ந்தது. அசைந்தாடும் தென்றலே தூது செல்வாயோ... அவள் மெல்ல பாடியபடி காரை கவனமாக மலைப்பாதையில் ஓட்டினாள். அந்த இசை என் செவியில் நுழைந்து மனதில் இசைந்து விழியை நிலவில் லயிக்க விட்டது. களைப்பில் உறங்கிப் போனேன். "அம்மா", கரும்புப்பூக்களை தன் கையில் ஏந்தி நின்றான் செங்கன். அந்த பூக்களை விட அவன் கைகள் பூத்து நின்றன. அவனை அனைத்து முத்தமிட்டேன். மழை நின்ற ஈசல் காட்டில் தும்பை பூக்கள். கார் நின்றபொழுது விழித்துக் கொண்டேன். " நீ தூங்கு" என்றபடி என் பையில் இருந்து கத்தியை எடுத்து காரின் பின் சீட்டின் கீழே வைத்தாள். பின் காரைக்கிளப்பி மெதுவாக ஓட்ட துவங்கினாள். தூக்கம் கலைந்து போனது.
"எழுப்பிட்டனா?" என்றாள்.
"இல்லை" வெளியே பார்த்தேன். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை அழுத்தியது. காட்டை விட்டுப் போகிறேன்.
"இன்னும் கொஞ்ச தூரத்தில செக் போஸ்ட். அதனால கத்தியை எடுத்து பின்னால வச்சேன்". அவளை திரும்பிப்பார்த்தேன்.
"நீ கவலைப்படாதே, நான் பாத்துக்குறேன்", சொல்லிக் கொண்டே போய் அந்த தடுப்பான் முன்னே காரை நிறுத்தினாள். செக்போஸ்ட்.
"எங்க போறீங்க" பூத்தில் இருந்த செக்யூரிட்டி கார்ட் கேட்டான். அவள் பதில் அளித்தாள். அவளுடைய அடையாள அட்டை வாங்கி பார்த்தான்.
"எங்கிருந்து வரீங்க?". அவள் சொன்னாள்.
"எதுக்கு இந்த காட்டுக்குள்ளார வரீங்க?".
"இதுதான் ஒரே பாதை"
அவளை உன்னித்து பார்த்து, பின் "இது யாரு?" என்று என்னைப்பார்த்து கேட்டான்.
"இவ என் எஸ்டேட்ல வேலை செய்யிற பொண்ணு".
"பேரு?"
"வள்ளி". அவன் தடுப்பானை திறந்து எங்களைப் போக அனுமதித்தான். அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினோம். அப்படியே உறங்கிப் போனேன். விழித்த போது ஒரு அம்மன் கோவிலின் வாசலில் கார் நின்றிருந்தது. பொழுது புலர்ந்து இளவெயில் முகத்தில் அறைந்தது. அருகில் அவள் இல்லை. காரை விட்டு இறங்கினேன். தூரத்தில் இருந்து அவள் அழைத்தாள். "இன்னைக்கு பௌர்ணமி உற்சவம். இருந்து பார்த்திட்டு சென்னைக்கு போவோம்". அவள் சொல்ல சொல்ல ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அவளைப் பின்தொடர்ந்தேன். அருகினில் இருந்த ஒரு புடவை கடைக்குள் நுழைந்தோம்.
